தீபங்கள் பேசும்

Monday, November 19, 2007

அம்முலு பூனை

இருள் கவிந்திருந்த இரவுப்பொழுதில் விடாது மழை பெய்து கொண்டே இருந்தது. அங்கொன்றும் இங்கொன்றுமாய் வீடுகளைத் தவிர நிறைந்து காணப்பட்ட மரங்கள் எல்லாம் புதுமழையில் நனைந்து புத்துணர்ச்சியோடு காற்று வீச்க்கொண்டிருந்தது.

எண்களாக இல்லாமல் வீடுகளின் பெயர்களாலே அடையாளம் காணப்படும் மரங்கள் அடர்ந்த பசுமை நகரம்.பெய்த மழையில் மின்சாரம் தடைபட்டிருக்க விளக்கு வெளிச்சத்தில் விழித்துக் கொண்டிருந்தது கோவில் தெரு பிருந்தாவனம் வீடு. பக்கத்துவீடு உறக்கத்திற்கு சென்றுவிட ஒருவிதமான கலவர முகத்தோடு கீதா! ஓயாத பூனை உருமல். முதன்முறையாய் இந்த அகால நேரத்தனிமை. இருளிலன் சூழலில் எந்த புதிய ஒலியும் அச்சமூட்டுவதாகவே இருக்கிறது.

ஏதோ சிந்தனையிலிருந்தவளை தொலைபேசி மணி அழைப்பு கலைத்தது.

கீதா! கணவனின் குரல்,
எப்ப வருவீங்க?
வழியெல்லாம் மழை, நான் வர இன்னும் கொஞ்ச நேரம் ஆகும், காத்திருக்காத!
நீ தூங்கிடுமா.
சரிங்க! ஏமாற்றமாகிப்போனது கீதாவிற்கு.

பயந்த சுபாவமான கீதாவிற்கு இந்த அனுபவம் புதிதாகவும் சிரமமாகவும் இருந்தது. விடாது பாடிய சுவாமி பாடல்கள் அவளுக்கு ஒரு தைரியியத்தை கொடுப்பதாக இருந்தது.

மாடி அறையிலிருந்து உர் உர் என உறுமல் சத்தம்! ஒரு மாதமாக வாசம் செய்யும் பூனையின் சத்தமது. இரவின் இருளும் தனிமையும் படபடப்பை அதிகரிக்க தானிருந்த அறையினை தாழிட்டு படுத்துக்கொண்டாள்.

புதிதாக இரண்டு பூனைகளை பிரசவித்திருந்த பூனை தூங்காது உறூமிக்கொண்டே இருந்தது. உறங்கிவிட்ட பக்கத்து வீட்டுக்காரர்களின் பூனைக்கு கீதாவின் மாடி வசதியாக விட்டது. பகலில் மாடிக்குப் போகும் போதும் கீதாவை பார்த்து உறூம, மாடிக்கு போவதையே தவிர்த்து வந்தாள் கீதா!. பூனை மீது பயம் என்றாலும் குட்டிப்பூனைகளை கண்டுவிட ஒரு ஆவல் அவளுக்குள்.

விடிந்ததும் ஜன்னல் வழியாக தாய்ப்பூனை வெளியே சென்று விட்டது. வீட்டு வேலைகள் எல்லாம் முடித்துவிட்டு மாடிக்கு போனாள் கீதா. இரண்டு குட்டியும் நன்கு தூங்கிக்கொண்டிருந்தது. சாம்பல் வெள்ளை நிறத்தில் ஒன்றும் கருப்பு வெள்ளை நிறத்தில் ஒன்றும் இருந்தன. தூரத்திலிருந்தே பார்த்தாள் அதுவும் தாய்ப்பூனையின் உறுமல் ஏதும் இல்லாத தைரியத்தில்.

எப்போதும் ஒரு மெல்லிய, இனிமையான உணர்வு ததும்பி இருக்கும்படி வைத்துக்கொண்டாள் அவள் வீட்டை. வீணையும், பாட்டும் தெரிந்திருந்தால், அந்த பகுதி குழந்தகளுக்கு சொல்லிக் கொடுத்து வந்தாள். எப்போதும் இருபது பேருக்கு குறையாதிருக்கும் அவளது வகுப்பில்.
கண்டிப்பும் கனிவும் இருப்பதால் குழந்தைகளுக்கும் அவள் மேல் பிரியம். விளையாடி விட்டு அப்படியே வகுப்புக்கு வேர்வை வழிய வரும் பிள்ளைகளை தன்னருகே அழைத்து, சேலைத்தலைப்பால் துடைத்து விடுவாள். ஏதோ ஒரு திருப்தி கிடைப்பதாக உணர்வு அவளுக்கு இப்படிச் செய்யும் போதெல்லாம்.

மாடிக்குப் போகும் போதெல்லாம் சில நிமிடம் பூனைக்காக செலவளிக்க ஆரம்பித்துவிட்டாள். முதன் முதலாக குட்டிப்பூனை கண் திறந்து பார்க்கையில் அவளுக்கு எல்லையில்லா மகிழ்ச்சி. அருகில் போகாமல் தூரத்திலிருந்தே பூனையின் அசைவினை ரசித்து விட்டு போனாள். இந்த புது அனுபவம் அவளுக்கு மகிழ்வைத் தந்திருந்தது

ஒருநாள் தாய்ப்பூனை குட்டிகளை எல்லாம் தூக்கிக் கொண்டு அடுத்த வீட்டுக்கு போய்விட்டது. பிரசவம் பார்க்க மட்டும் நம்ம வீட்டுக்கு வந்திருக்கு போல இந்த பூனை என்று நினைத்தவாறே வேலையில் ஆழ்ந்தாள். உறுமும் பூனை போய்விட்டதால் இனி பயமில்லை என்று மகிழ்ந்தாலும், அந்த குட்டி பூனைகளை பார்க்க முடியாது என்பது ஒரு விதமாய் அழுத்தியதாலோ என்னவோ சட்டென்று முகம் வாடிவிட்டது.

மாடிக்குப் போகும் பேதெல்லாம் பூனையிருந்த தடங்களின் மீது அவள் கண் படாதிருந்ததே இல்லை. மாதம் ஒன்று ஓடிவிட்டது. இரண்டு குட்டியில் ஒரு குட்டி காணமல் போய்விட்டது, சாம்பல் நிற குட்டி மட்டும் இருந்தது. ஏதோ சிறு குழந்தை சத்தம் போல் கேட்க கதவை திறந்து வந்து பார்த்தாள். குட்டி பூனை தனியாக வாசற்படியருகே நின்றது. அதன் சாந்தமான முகம் பூனைகள் குறித்தான அவள் அச்சத்தை நீக்குவதை போல இருந்தது. மிகவும் சிறியதாக கையளவே முகம் கொண்டிருந்த பூனைக்குட்டியை பார்த்ததுமே ஒரு சந்தோசம் அவளுக்குள் அது சன்ன குரலில் மியாவ் மியாவ் என சொல்ல மழலைச் சொல் கேட்டது போன்றே பூரிப்பு. சமயலறையிலிருந்து பால் கொண்டு வந்து சிறிய கிண்ணத்தில் வைத்து கொடுத்தாள். குட்டிப்பூனை அதை சமர்த்தாக குடித்தது.

இன்னிக்கு குட்டிப்பூனைக்கு பால் கொடுத்த்தேன். அப்படியே குடிச்சிட்டது. குழந்தை போல கீதா விவரிக்க புன்முறுவலுடன் கேட்டுக்கொண்டிருந்தான் அவள் கணவன்.

குட்டிப்பூனைக்கு இப்போது தினந்தோறும் பால் கிடைக்க ஆரம்பித்துவிட்டது. பசியெடுத்தால் கதவருகே வந்து மியாவ் மியாவ் என சத்தம் கொடுக்கும். பூனையின் மொழி அவளுக்கு புரியத் தொடங்கிவிட்டது. பால் குடித்து பழகிவிட்ட குட்டிப்பூனை அவள் அருகே வந்து வாலை ஆட்டிக் கொண்டு நின்றது. குட்டிப்பூனையின் ரோமங்கள் அழகாக மெதுமெதுவென்று இருக்க அதைத் தொட்டுப்பார்க்க ஆசைப்பட்டாள். வாசற்படியில் உட்கார்ந்து கொண்டு பூனையின் வாலருகே கையை கொண்டு போனாள். குட்டி எந்த வித எதிர்ப்பும் தெரிவிக்காமல் மெளனமாய் இருக்க ஒற்றை விரலால் வாலை நீவீ விட்டாள். மிக மிருதவான வால், இங்கும் அங்கும் ஆடிக்கொண்டிருந்தது. குட்டிப்பூனை அவளின் பயம் போக்கி ஒரு நேசம் விதைத்திருந்தது. ஒரு வாரத்தில் குட்டிபூனையின் முதுகைத் தடவித்தரும் அளவிற்கு சிநேகம் வளர்ந்து விட்டது.

காலை டீயூசன் ஆரம்பிக்கும் முன் வாசலுக்கு வருவாள். அதே நேரம் சரியாக குட்டிப்பூனை புதிதாக பிறந்த இன்னொரு பூனையோடு வந்து விளையாட ஆரம்பித்துவிடும். ஆட்டம் முடிந்து களைப்பு வந்தவுடன் ஒரு பார்வை இவளைப்பார்த்து. அதன் பார்வையை புரிந்து கொண்டு அவளும் பால் ஊற்றிவிடுவாள். கொலுசு சத்தம் கேட்டவுடன் குட்டிப்பூனை ஓடி இவளருகே வர இவளுக்கோ பேரானந்தம், குட்டிப்பூனையோடு சேர்ந்து அவளுடைய வயது பின்னோக்கி போனது.

வீட்டுக்காரர்கள் பூனைக்கு அசைவ உணவு போட்டாலும் இப்போது பாலுண்ணுவது தினசரி நிகழ்வாகிப்போனது. டீயூசனுக்கு வந்த சிறுமி பூனையை லாவகமாக தூக்கி மடியில் வைத்து கொஞ்சி விளையாடியது இவளக்குள் ஒரு குதூகலத்தை ஏற்படுத்தியது, இவள் கண்களில் விரிந்த ஆச்சர்யத்தை பார்த்துவிட்டு, என்ன டீச்சர் பூனையை தூக்கணுமா என்று கேட்டாள்.

அவளுக்கு தூக்க வேண்டும் என்று ஆசையாக இருந்தது, பூனையின் உடம்பு எப்படி இருக்கும், எலும்பு சதை எல்லாம் இவ்வளவு சின்னதா இருக்கே, அதத தூக்கினா வலிக்குமா, எப்படி பிடிக்கணும்னு தெரியாதே, துள்ளி ஓடிடுமா என ஏராளமாய் மனதிற்குள் ஓட, அவள் கைகளில் பூனையை கொடுத்தாள். இலவம் பஞ்சு போல மேனி, பொசுபொசுவென்று அழகிய ரோமம், மெல்ல தடவிப்பார்க்கையில் தட்டுப்படும் எலும்பு, முதன் முதலாய் பூனையை தூக்கி வைத்திருப்பது அவளுக்கு மகிழ்வையும், வீரத்தையும் தந்தது போல கலவையான உணர்வைத் தந்தது. அம்முலு என்றாள். வெடுக்கென்று குட்டீப்பூனை திரும்பி பார்த்தது. அம்முலு அம்முலு என்று ஒவ்வொரு முறை கூப்பிடும் போது திரும்பி பார்த்தது அவளிடம் ஓடி வந்தது.


வீட்டு வேலைக்கு வந்திருந்த பெண்ணிற்கு வீட்டு பின்புறத்திலுல்ள முருங்கை மரத்திரலிருந்து ஐந்தாறு முருங்கைகாய்களை பறித்து தந்தாள். நீண்ட நாட்களாக கீதாவிடம் வம்பளக்க வாய்ப்பு தேடியவளுக்கு இதைப் பார்த்துகொண்டிருந்த வீட்டுகாரி எப்படி நீ அவளுக்கு தரலாம் என்று சண்டைக்கு வந்துவிட்டாள், அதிர்ந்து பேசிடாதா கீதாவிற்கு குரலுயர்த்தி பேசும் வீட்டுக்காரியின் பேச்சு கோவத்தை ஏற்படுத்திவிட்டது. அவளுக்கு தந்ததால் என்ன என்றூ திருப்பிக்கேட்க, பாட்டு சொல்லி கொடுக்கிற டீச்சருக்கு எப்படி நடந்துகிணம்னு தெரியலையே என கண்டபடி பொரிந்து தள்ளிவிட தாளத வேதனை. மூதாதையர்களும் அவளது வசைபாடலில் தப்பவில்லை,

வீட்டுக்காரியின் ஆவேச பேச்சு கீதாவுக்குள் ரணத்தை ஏற்படுத்தி விட்டது. பத்து வருசமா இதே வீட்டில் இருந்தாலும் எந்த சச்சரவுக்குள்ளும் தலையிடாத தனக்கு நேர்ந்ததை எண்ணி வேதனையில் அமிழ்ந்து போனாள்.

மறுநாள் காலை டீயூசன் சீக்கிரம் ஆரம்பித்துவிட அம்முலு வாசலைச் சுத்தி வந்து எட்டிப்பார்த்தது, உள்ளே கீதா பாடம் நடத்திக்கொண்டிருக்க வாசலில் படுத்துகொண்டு காத்திருந்தது அவள் வருகைக்காக. எட்டு வருடங்களாக அருகருகே குடியிருந்தும் தன்னை புரிந்து கொள்ளத வீட்டுக்காரிக்கும், பிறந்து கொஞ்ச நாளே ஆனாலும் வகுப்பெடுப்பது தெரிந்து முழுமையாக இரண்டு மணி நேரம் வகுப்பு முடியும் வரை சத்தம் ஏதும் கொடுக்காமல் காத்திருந்த அம்முலு அவளுக்குள் ஏராளமான செய்திகளை சொல்லியாதாக உணர்ந்தாள்.

எந்த சச்சரவுகளும் இல்லாதது போலவே கீதாவின் காலைச்சுற்றிக் கொண்டு விளையாடிக்கொண்டிருந்தது அம்முலு பூனை!
posted by முத்துகுமரன் at 4:20 AM

1 Comments:

நம் ஊர்க்கதையாக இருக்கிறது:(

6:15 PM  

Post a Comment

<< Home